இலங்கையின் துறைமுக நகர சட்டமும் 13 ம் திருத்தமும் | சட்டம்

 
துறைமுக  நகர சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட போதும் அதற்கெதிரான விமர்சனங்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட வண்ணமே உள்ளன. இலங்கையின் ஆட்புலத்திற்குள் தனியான நிலப்பரப்பினை நிறுவுவதன் ஊடாக இலங்கையின் ஆட்புல இறைமையை மீறுதல் , ஒற்றையாட்சி தத்துவத்தை மீறுதல் ஆகியவற்றோடு இச்சட்டமூலம் முரண்படுவதாக ஒற்றையாட்சி தத்துவத்தை ஆராயும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர.; ஆனால் இச்சட்டமூலமானது இலங்கையின் அதிகார பரவலாக்க கட்டமைப்புகளின் அதிகாரங்கள் மீதும் மிக மோசமான அழுத்தத்தை பிரயோகிப்பதையும்  நாம் தெளிவாக காண முடிகின்றது. குறிப்பாக உள்ளுராட்சி நிறுவனங்கள் மாகாண சபை அதிகார கட்டமைப்புகளின் அதிகாரங்கள் மீதும் இச்சட்டமூலம் கைவைக்கின்றதை அவதானிக்க முடிகின்றது. அதாவது மாகாண சபைகளின் அதிகாரங்களில் கடந்த காலங்களில் கைவைத்த மத்திய அரசு இச்சட்டமூலத்தின் உருவாக்கத்தின் மூலம்  மேலும்  குறைப்பு செய்ய முன்வந்திருப்பதை காண முடிகின்றது. அதற்காகவா மாகாண சபை தேர்தல்களை அரசு பிற்போடுகின்றது என்ற சந்தேகமும் எழுகின்றது. 

இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் பதவி காலம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மாகாண சபை தேர்தலை அரசு நடத்த இதயசுத்தியான நடவடிக்கை எடுக்க முற்படாமை தமது செயற்பாடுகள் மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைப்பு செய்யவா என்ற சந்தேகம் எழுகின்றது. குறிப்பாக துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான அரசின் செயற்பாடு மாகாண சபை தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன் மாகாண சபையின் அதிகாரங்கள் தோண்டியெடுக்கப்பட்டு வெற்று கோதாக  மாகாண சபையை மட்டும் வைத்திருத்தலை அரசு தனது நோக்கமாக கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகின்றது,  

அரசு தரப்பு மாகாண சபையின் நிரல் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட விடயதானங்களில் தொடர்புடைய சட்ட மூலங்களை கொண்டு வந்து அது நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தப்படும் போது மாகாண சபை தொடர்பில் கருத்து தெரிவிக்க மாகாண சபைகள் இல்லை. ஆகவே நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றை சட்டம் தேவைப்படுத்தக்கூடாது என நீதிமன்றங்களில் வாதாடி மாகாண சபையின் அதிகாரங்களை பிற்பொக்கட் அடிப்பதற்கா தேர்தலை தாமதப்படுத்துகின்றது  என்ற சந்தேகம் யதார்த்த நிலையில்  தவிர்க்க முடியாமல் எழுகின்றது. 

மாகாண சபை முறைமை என்பது 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட மிக முக்கிய ஏற்பாடாக காணப்படுகின்றது.இது நிர்வாக குழப்பத்துக்கு வாய்ப்பேற்படுத்துகின்றது. ஆகவே இது நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. இது இனப்பிரச்சனைக்கு தீர்வாகவே கொண்டு வரப்பட பட்டது . நிர்வாக பிரச்சனைகளின் தீர்வாக இது கொண்டு வரப்படவில்லை என்பதை அறியாத பலர் இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். இதன் நீக்கத்துக்கு அப்பால் புதிய அரசு ஆட்சி பீடமேறியதன் பின்னர் மாகாண அதிகாரத்தை உறிஞ்சி எடுக்கும் செயற்பாடுகளை மறைமுகமாக செய்து வந்தது. இப்போது தனது மூன்றில் இரண்டு வல்லமையுடன் சட்ட உருவாக்க செயற்பாடுகள் மூலம்  நேரடியாகவே ஈடுபட தொடங்கி விட்டதா? என்ற சந்தேகம் அதிகம் எழுகின்றது. 

இந்த முயற்சிகள் மத்தியில் அதிகாரம் குவித்து வைக்கப்பட வேண்டும் என்ற மன எண்ணத்தின் அல்லது அரசியல் கலாசாரத்தின் விளைவாக ஏற்பட்டதா? என்பதும் ஆய்வுக்குரியதே . இவ்வாறு  அதிகார பரவலாக்க கட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீது கைவைப்பதற்கு மத்திய அரசு பல முயற்சி மேற்கொண்டதையும் காணலாம் . மத்திய அரசின் இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் பலவற்றில்  இலங்கையின் உயர் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண முற்பட்டதையும் நாம் தெளிவாக அவதானிக்கலாம். 2010 ஆண்டில் இருந்து இதன் வரலாற்றை ஆராய்ந்தால்  அறியக்கூடியதாக இருக்கின்றது. இலங்கையின் பிரதம நீதியரசர் ஒருவரே பதவிக்கதிரையில் இருந்து அகற்றப்பட்டு தெரிவுக்குழு விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய நெருக்கடி நிலையும் ஏற்பட்டதையும் காணலாம்.

ஆனால் துறைமுக நகர சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பின் மாகாண சபை சம்பந்தமான சில அதிகாரங்களை பறிந்தெடுப்பதாக செய்யப்பட்ட சமர்ப்பணங்களை உயர் நீதிமன்றம் புறமொதுக்கி வைத்தமை அதிகார பரவலாக்கத்தின் மீதான நம்பிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. நடைமுறை சாத்தியமில்லாத விடயம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு கோருதல் சட்டத்தின் தேவைப்பாடாக அமையாது என்ற சட்ட   மூதுரையின் அடிப்படையிலேயே நீதிமன்றம்    அதனை நிராகரித்தது. எனவே அரசு தேர்தல்களை தாமதப்படுத்துவதும் இந்த சட்டமூதுரையை பயன்படுத்தி மேலும் அதிகாரங்களை குறைப்பு செய்வதற்கா என்ற அச்சம்  அதிகார பரவலாக்கத்தையும் அதனூடாக ஜனநாயகத்தையும் நேசிக்கும் மக்களிடையே ஏற்படுகின்றது. 

மாகாண சபையின் நிரல் அட்டவணை அதிகாரங்கள் அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக வரையறுக்கபபட்டுள்ள்ளன. மாகாண அரசுக்குரிய நிரல், மத்திய அரசிற்குரிய நிரல் , ஒதுங்கிய நிரல் என அரசியலமைப்பு சட்டம் தெளிவாகவே வரையறுக்கின்றது. அத்துடன் நிரல் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயதானங்களில் பாராளுமன்றம் சட்டமியற்ற முடியாது என அரசியலமைப்பு சட்டத்தின் 154 எ மூன்றாம் உறுப்புரை கூறுகின்றது. மீறி சட்டமியற்ற வேண்டிய தேவை ஏற்படும் போது சில தேவைப்பாடுகளை அரசியலமைப்பு சட்டம் தெளிவாகவே விதந்துரைக்கின்றது.

ஒரு சட்டமூலமொன்று மாகாண சபையின் ஒன்பதாம் அட்டவணையில் உள்ளடங்குகின்ற விடயம் சார்ந்திருந்தால் அது சட்டமாக வருவதற்கும் பாராளுமன்ற நிகழ்ச்சி தாளில் இடப்படுவதற்குமுள்ள நிபந்தனைகள் பற்றி அரசியலமைப்பு சட்டம் கூறுகின்றது. 


 அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்புரை 154  உறுப்புரையின் எ  மூன்றாம் பகுதி பின்வருமாறு தேவைப்படுத்துகின்றது. 

மாகாண சபையின் நிரலில் தரப்பட்டுள்ள ஏதேனும் கருமம் தொடர்பிலான சட்டமூலம் எதுவும்  அத்தகைய சட்டமூலமானது வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னரும் பாராளுமன்ற நிகழ்ச்சி தாளில் இடப்படுவதற்கு முன்னரும்  ஆற்றுப்படுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான காலப்பகுதிக்குள் அச்சட்டமூலம் தொடர்பான மாகாண சபையின் கருத்துக்களை தெரிவிப்பதற்கென ஒவ்வொரு மாகாண சபைக்கும் சனாதிபதியால் ஆற்றுப்படுத்தப்பட்டாலொழிய சட்டமாக வருதல் ஆகாது என அரசியலமைப்பு சட்டம் தெளிவாக கூறுகின்றது. அதன் அ பகுதியானது அத்தகைய ஒவ்வொரு மாகாண சபையும் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு உடன்படுகின்றவிடத்து அச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமூகமளித்தோரின் பெரும்பான்மையோரால் நிறைவேற்றப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன் ஆ உறுப்புரையானது ஒன்றோ அல்லது பலவோவான சபைகள் சட்டமூலத்தை நிறைவேற்ற உடன்படாதவிடத்து அரசியலமைப்பு சட்டத்தின் 82 ஆம் உறுப்புரையில் தேவைப்படுத்தப்பட்டதன் படி மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும் என குறிப்பிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

துறைமுக நகர சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் மாகாண சபையின் நிரல் அட்டவணையில் இருக்கின்ற சில விடயதானங்களோடு தொடர்பு படுவதை காணலாம். குறிப்பாக காணி , வியாபாரம் , நகர நிர்மாணம் புனர்வாழ்வு , உள்ளூராட்சி ஆகிய மாகாண நிரல் அட்டவணைகளோடு இவை  தொடர்பு படுவதனை துறைமுக நகர சட்டத்தின் சில ஏற்பாடுகளை அவதானிக்கையில் காண முடிகின்றது. ஆனாலும் மத்திய அரசின் நிரலில் உள்ள பொதுக்கொள்கை உருவாக்கம், அரச காணி , பொருளாதாரம் ஆகிய விடயங்களிலும் சில ஏற்பாடுகள் காணப்படுகின்றன. மத்திய அரசின் நிரலில் இருக்கின்ற தானங்கள் தொடர்பில் மத்திய அரசு மாகாண சபையிடம் கருத்தறிய வேண்டிய தேவை கிடையாது என்பது அரசின் நியாயப்பாடாக அமைகின்றது.  அதாவது துறைமுக நகர சட்டத்தின் சில ஏற்பாடுகள் 154 ஆம் உறுப்புரை மேற்கோளிடம் மாகாண நிரல் மற்றும் ஒருங்கிய நிரல் அட்டவணையினோடு மேற்குறித்த அடிப்படையில்  தொடர்பு படுவதனை ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் நீதிமன்றில் முன்வைத்ததையும் நாம் அவதானிக்கலாம். ஆனால் மாகாண சபைகள் கலைக்கப்பட்டு அல்லது பதவிக்காலம் முடிவடைந்திருப்பதால் அச்சபைகளிடம் 154 எ 3 கீழ் ஜனாபதியால் ஆற்றுப்படுத்தி குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில்  கருத்தறிவது நடைமுறை சாத்தியமற்றது ஆகையால் அதனை கோரமுடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகவே மாகாண சபைகளை இது வரை நடத்தாமல் அரசு மாகாண சபைகளின் அதிகாரத்தில் கைவைக்கும்  ஒரு சட்டமூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றுவது நடைமுறைச்சாத்தியமில்லாதது என்பதை நீதிமன்றங்களில் காட்டிக்கொண்டு மாகாண அதிகாரத்தின் மீது கைவைக்கவா? என்ற கேள்வி எழுகின்றது. 


அத்துடன் இத்தகைய தீர்ப்பை உயர் நீதிமன்றம் திவி நெகும சட்டமூலம் தொடர்பிலான வழக்கிலும் வழங்கியிருந்தது. அப்போதும் வடக்கு மாகாண சபை இயங்காத நிலையே காணப்பட்டது. ஆனாலும் மாகாண சபையின் கருத்தறிய முடியாத சூழலில் மத்திய அரசின் பிரதி நிதியாகிய ஆளுனரின் கருத்தை அறிந்த பின்னர் இச்சட்டமூலத்தை நிறைவேற்ற அரசு முற்பட்ட போது இதற்கெதிரான வழக்கு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யபப்ட்டது. இவ்வழக்கின் தீர்ப்பில் மாகாண சபையின் மாகாண சபையின் முதலமைச்சர் தெரிவிக்க வேண்டுமே தவிர ஆளுநர் அந்த கருத்தை தெரிவிக்க முடியாது என தீர்ப்பிடப்பட்டதை இங்கு குறிப்பிட்டு கொள்ள முடிகின்றது. 

ஆகவே தொகுத்து நோக்குகையில் மாகாண சபையின் அதிகாரங்கள் மீது கைவைக்கும் இரு சட்டமூலத்தை அரசு கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது மாகாண சபை மூலமான அதிகார பரவலாக்க முயற்சிக்கு பெரும் பின்னடைவாகும் . மாகாண சபை தேர்தலை கூட நடத்த பின்னடித்து மாகாண அதிகாரங்களை கபளீகரம் செய்யும் இத்தகைய அரசின் செயற்பாடுகள் அதிகார குவிப்பின் மீதான ஆசையாக அடையாளப்படுத்தி கொள்ள முடிகின்றது. 13 பிளஸ் , மாகாண சபை முறைமை ஊடாக இனப்பிரச்சனை தீர்வு என்ற வார்த்தைகளை உச்சரித்து கொண்டு மாகாண சபைகளின் அதிகாரவிடயங்களில் கைவைக்கும் செயற்பாட்டுக்கான ஆதாரமாக துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான அரசின் செயற்பாட்டை தெளிவாக குறிப்பிடமுடியும். 

நாம் அரசியலமைப்புக்கு விரோதமாக எதுவும் கொண்டு வரவில்லை என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி அண்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு தனது பேட்டியை வழங்கியிருந்தார். அதற்கு அவர் துணைக்கு இழுத்தது சட்ட உருவாக்கல் பொறிமுறையையும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சம்மதத்துடன் தான் கொண்டு வந்தோம் என்பதையே ஆகும். அதாவது சட்டமா அதிபர் சம்மதம் தெரிவித்து இது அரசியலமைப்பை எந்த வகையிலும் மீறவில்லை என கூறியதன் பின்னரே வர்த்தமானியில் வெளியிட்டோம் என நீதியமைச்சர் தெரிவித்தார். அது அரசியலமைப்பு சட்டத்தை மீறவில்லை என சட்டமா அதிபர் வர்த்தமானியில் வெளியிட உறுதியளித்தது உண்மையாயின் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பை மீறும் ஏற்பாடுகளை நாம் திருத்துகிறோம் என கூறினார் என்ற கேள்வி எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் கேள்வியெழுப்பியதையும் இக்கட்டுரையினூடாக குறித்து கொள்ள முடிகின்றது.  அரசின் மூன்றில் இரண்டு இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் புஸ்வாணமாக மாறி 149 வாக்குகளே அரசுக்கு கிடைத்தமை அரசின் பின்னடைவாகும். இது மாகாணத்தின் அதிகாரங்கள் ஒற்றையாட்சி தத்துவத்திலும் இலங்கையின் இறைமையிலும் கைவைக்கும் அரசின் செயற்பாடுகளுக்கு கிடைத்த பின்னடைவாகவும் அவதானிக்க முடிகின்றது. 

Sambasivam harikaran

B.A,PGDP, M.A in political science, PGDE( r)

Comments