வரலாற்றுப் பதிவுகளே ஒரு சமுதாயத்தின் கண்ணாடி | வரலாறு (குறிப்புகள்)

"வரலாற்றுப் பதிவுகளே ஒரு சமுதாயத்தின் கண்ணாடி" பழம் பாலி நகரத்தைப் பக்குவப்படுத்தல் 

எஸ். ஆறுமுகம் BSc (Lond) / MICE, MIWE (நீர்ப்பாசனப் பகுதி அதிபர்) ஸ்ரீலங்கா மார்ச் 1957 

article on Facebook

மங்களம் மலரும் மாங்குளம் என்னும் இடத்திற்குத் தென்மேல் திசையில் சற்றேறக்குறையப் பத்து மைல் தூரத்தில் காடடர்ந்த இடத்தில் ஓர் சீரழிந்த குளம் உண்டு. அதன் பெயர் இப்பொழுது "வவுனிக் குளம்" என்பதாகும். இந்தக் குளம் எப்பொழுது, யாரால் கட்டப்பட்டது என்பன இன்று எவருக்கும் தெரியாத மறை பொருளாக இருக்கின்றன. 

இதைப்பற்றி யாம் முதன் முதல் கேள்விப்படுவது மகாவம்சம் (Mahavamsa XXVIII. 39) எனும் நூலிலாகும். அதில் கூறப்படுவதிலிருந்து இக்குளம் கி.மு. 3ம் நூற்றாண்டளவில் வாழ்ந்த எல்லாள மன்னன் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என பொறித்துறை ஆராய்ச்சியாளர்களாகிய ஹென்ரி பாக்கரும் (Henry Parker) அவரையொட்டி புரோகியரும் (R. L. Brohier) அனுமானித்திருக்கின்றனர். பின் வசபன் செய்கை பற்றிப் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டிலும் இக் குளத்தின் பெயர் விளங்குகின்றது. அதன் பின் ஆங்கிலேய இஞ்சினியர்களின் அறிக்கைகளில் 1887 ம் ஆண்டு தொடக்கம் இக் குளம் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. 

ஊர்ச் சிறப்பு 

இக்குளம் இருக்கும் இடத்தின் அயல் எல்லாம் பார்ப்பார்கள் வெளி யென்றும், மன்னர் குளம் என்றும், தட்டான் குளம் என்றும், பாணன்கமம் என்றும், வாணன் கமம் என்றும் இன்னும் இவ்வகைத்தான பெயர்களைக் கொண்ட கிராமங்களாய் இருந்திருக்கின்றன. இங்குள்ள காட்டில் ஒரு பகுதி கோவில் காடு என்ற பெயருடையதாய் இருக்கின்றது. கோவில்கள் இருந்ததற்குப் பல சான்றுகள் இன்றும் காணப்படுகின்றன. 

இவ்வாறு கோவிலும் குளமும் பார்ப்பார், மன்னர், தட்டார், பாணர், வாணர், ஆதியாம் பற்பல குலத்தாரும் வாழ்ந்த இடங்களும் இருந்து வந்தமையால் இங்கு ஒரு நகரம் இருந்திருக்க வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிதிற் புலனாகும். ஆராய்ந்து பார்க்குமிடத்து இது முன்பு சொன்ன வசபன் கல்வெட்டில் சொல்லப்படுகின்றது. இந்த நகரத்திற்கு அக்காலத்தில் பாலி நகரம் என்ற பெயர் வழங்கியிருக்கின்றது. இப்பொழுதும் இவ்விடத்தில் ஓடும் ஆறு பாலி ஆறு என வழங்கப்படுகின்றது. கோயிலை நடுநாயகமாகக் கொண்டு நகரமைக்கும் முறை பன்னெடுங்காலமாகத் தமிழால் கையாளப்பட்டு வருகின்றது.

இப்பாலியாற்றின் அருகிலுள்ளதும், சரித்திரத்திற்கும் எட்டாததாய் இருக்கின்றதும், இலங்கையில் முதன் முதல் கட்டப்பட்டதெனப் படுவதுமாய "பாலிக் குளம்" இன்று வன்னிய அவனி புரக்கும் நீர்த்தேக்கமாகையினால் வவுனிக் குளம் என வழங்குகின்றது போலும். 'கோவிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்' என்ற சமய குரவர் கூற்றுக்கு இலட்சியமாய் இருந்தார்கள் நம் பாலி நகரார். இன்று அக் கோவில் ஸ்தலம் யாவும் கோவில்காடு எனக் கிடக்கின்றது, அக்கோவிற்காட்டில் இன்று பல விக்கிரகங்கள் உடைந்து கிடப்பதைக் காணலாம். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த, வவுனிக் குளம் என்னும் பாலி வாளித் தடாகத்தை, இப்போது நீர்ப்பாசன இலாகா எஞ்சினியர்கள் புதுக்குவதற்கு முயலுகின்றனர். அபிவிருத்திச் சரித்திரக் குறிப்புகள் பழைய நீர்த்தேக்கத்தில் தற்போதுள்ள மண் அணைக்கட்டுகளில் ஆங்காங்கே காணப்படும் உடை கடவான்களைக் கட்டி 88 சதுர மைல் பரப்பு வடித்தரையினின்று வழியும் நீர், தடாகத்தில் சேமிக்கப்படும். 

இந்த அணைக்கட்டு வரம்பு இரண்டரை (2 1/2) மைல் நீளத்திற்கு மேலுடையதாய் இரு அந்தங்களும் உயர்ந்த மேடுகளில் தொடுக்க | இணைக்கும், 700 அடி அகல சீமென்றுக் கொன்கிரீட் வரம்பு மிதவையால் பாலி யாற்றின் மிகுதி நீர் பாயும். கடல் மட்டத்திலிருந்து 142 அடி உயாத்திற்கு நீர் தேங்கி நிற்கும். 4 அடி அகலமுள்ள இரு நீர் வடிமதகுகளால் நீர்ப்பாசனத் தேவைக்கு வேண்டிய நீர் பெறப்படும். இம்மதகுகள் ஆற்றின் இடது கரைப் பிரதேசத்திற்கும் வலது கரைப் பிரதேசத்திற்கும் நீரளிக்கும், 30,000 ஏக்கர் அடி நீர் வாவியில் சேமிக்கப் பெறும். இப் புதுக்குதற் திட்டம் வலது கரையோரக் குளக்கட்டிலிருந்து துணுக்காய் வரையும் உள்ள பிரதேசத்தில் விளைவுக்கு நீரளித்து, விவசாயிகள், குடியேற்றப் பிரதேசமாகும், இடது கரையோரம் குளக்கட்டிலிருந்து துணுக்காய் பூவரசங்குளம் றோட்டு வரை பரந்த பிரதேசத்தில் விளைவுக்கு நீரளித்து நடுத்தர வகுப்பினர் புலப்பிரதேசமாகும். 

"வாப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும்" என்றார் ஔவையார். 

எஸ். ஆறுமுகம் BSc (Lond) / MICE, MIWE (நீர்ப்பாசனப் பகுதி அதிபர்)

Comments