தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்படும் என்ற கருத்து தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு பற்றிய நியாயப்படுத்தல்களும் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தும் தரப்பிலிருந்து வெளியாகும் நியாயப்படுத்தல்கள் ஒன்றுக்கு ஒன்று முரணானதாக அமைவதையும் காண முடிகின்றது. அந்த வகையில் அவர்கள் தேசிய கீதம் இலங்கையின் அரசியலமைப்பில் சிங்கள மொழியில் காணப்படுவதாகவும் ஆகவே சிங்கள மொழியில் பாடுதல் சரியென்ற அடிப்படையில் தனது நியாயப்படுத்தலை முன்வைத்திருப்பதை காணலாம். வேறு சிலர் அதற்கு சட்ட மொழி பிரயோகம் பற்றி குறிப்பிடும் அரசியலமைப்பின் 22 ஆம் உறுப்புரையையும் துணைக்கு இழுத்திருப்பதை காணலாம் எனவே இவ்விடயம் அரசியலமைப்பு சட்ட ரீதியாக ஆராய வேண்டிய சூழல் எழுகின்றது.
அரசியலமைப்பின் மூன்றாம் அட்டவணை உறுப்புரை ஏழு தேசிய கீதம் சிறிலங்கா தாயே என தொடங்குதல் வேண்டும் அதன் சொற்களும் இசையும் மூன்றாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டதன் படி காணப்பட வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகின்றது . அதாவது அந்த உறுப்புரையில் இலங்கையின் தேசிய கீதம் பின்வருமாறு தொடங்குதல் வேண்டும் என உள்ளதே தவிர சிங்கள மொழியில் பாடுதல் வேண்டும் என எங்குமே சொல்லப்படவில்லை . இந்த நிலையில் அரச கரும மொழியின் பிரயோகத்தை மறுப்பதானது அரச கரும மொழிகள் பற்றி கூறும் அரசியலமைப்பின் உறுப்புரை 18 ஐ அப்பட்டமாக மீறும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டிய சூழல் உள்ளது. அந்த வகையில் அரச கரும மொழியாக தமிழை பிரகடனப்படுத்திய அரசியலமைப்பின் பதின் மூன்றாவது திருத்தம் பின் வருமாறு கூறுகிறது. இலங்கை ஜனனாயக குடியரசின் அரசியலமைப்பு இதனகத்து பின்னர் அரசியலமைப்பு என குறிப்பிடப்பட்டு அதன் 18 ஆவது உறுப்புரை பின்வருமாறு திருத்தப்படுகின்றது. தமிழும் அரச கரும மொழியாதல் வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும். பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என குறிப்பிடுகின்றது
மேலதிகமாக தமிழ் மொழியின் பிரயோகத்தை உறுதிப்படுத்திய
16 ஆம் திருத்தம்.
22 (Languages of Administration)
(1) Sinhala and Tamil shall be the language:; of administration through out Sri Lanka and Sinhala shall be the language of administration and be used for the maintenance of public records and the transaction or all business by public institutions of all the provinces of Sri Lanka other than the Northern and Eastern Provinces where Tamil shall be so used என கூறுகிறது. அதாவது தமிழும் சிங்களமும் இலங்கை முழுவதும் நிர்வாக மொழியாதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டு மொழியுரிமை உறுப்புரை 22 திருத்தப்பட்டு இருப்பதை காணலாம். எனவே இலங்கையின் மீயுயர் சட்டமாகிய அரசியலமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு உறுப்புரைகளும் திருத்தங்களும் தமிழ் மொழியின் பிரயோகம் பற்றி தெளிவாக குறிப்பிடுகின்றதை காண முடிகின்றது.
அரசியலமைப்பு சட்டம் சிங்கள மொழியில் இப்படி காணப்படுகின்றது என குறிப்பிடும் தரப்புகளின் கருத்துக்களில் அரசறிவியல் ரீயியிலும் அரசியலமைப்பின் வரலாற்று அடிப்படையிலும் தெளிவற்ற தன்மையை காணலாம்
இலங்கை அரசியலமைப்பு வரையப்பட்ட காலமான 1978 காலப்பகுதியில் அந்த அரசியலமைப்பு தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகள் வெளியிடப்பட்டதை காணலாம். எனவே பொருள் கோடல் பிரச்சனை எழும் போது அரசியலமைப்பு எழுதப்பட்ட காலத்தில் சிங்கள உரை மேலோங்குதல் வேண்டுமென்றொ தமிழ் உரை மேலோங்குதல் வேண்டுமென்றோ எங்குமே சொல்லப்படவில்லை.
ஒரு வேளை சட்டம் எழுதப்பட்ட மொழியில் தான் பாடப்பட வேண்டும் என யாராவது சொல்ல வந்தால் அதனை மறுதலிக்கும் நியாயப்பாடுகளையும் அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டு நிருபிக்க முடிகின்றது. அந்த வகையில் 23 ஆம் உறுப்புரை பின்வருமாறு சட்டவாக்க மொழியின் பிரயோகம் பற்றி குறிப்பிடுகின்றது .எல்லா சட்டங்களும் துணை நிலை சட்டங்களும் இரண்டு தேசிய மொழிகளிலும் சட்டமாக்கப்படுதல் வேண்டும். அவை ஆங்கில மொழி பெயர்ப்பையும் கொண்டிருக்க வேண்டும். இரண்டு உரைகளுக்கு இடையில் ஒவ்வாமை இருக்கும் நிலையில் அரச கரும மொழியின் உரையே மேலோங்குதல் வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. இந்த விடயம் சாதாரண சட்டங்களில் மொழி பிரயோகத்திற்கு ஏற்ப வரையப்பட்டிருப்பதை காணலாம். அதனால் அந்த சட்டங்கள் அனைத்தின் முடிவிலும் சிங்கள உரை மேலோங்குதல் வேண்டும் என கூறப்படுகின்றது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தில் அவ்வாறு எதுவும் கூறப்படாமையை நாம் காணலாம் எனவே இதனை அடிப்படையாக கொண்டு தேசிய கீதம் சிங்கள மொழியில் அரசியலமைப்பில் காணப்படுகின்றது என்ற கருத்தை நிராகரிக்க முடிகின்றது.
எனவே தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட வேண்டும் என்ற நியாயப்பாடுகளும் இனவாத சித்தாந்த எண்ணங்களை கொண்ட கருத்துக்களாகவே ஆய்வாளர்களால் எடுத்துக்கொள்ள முடிகின்றது. சிலர் கடந்த இல ங்கையின் பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் இனவாதம் வாக்கு வங்கியை அதிகரித்து கொள்ள பயன்படுத்தப்பட்டதை போல் தமிழ் மொழி தேசிய கீத புறக்கணிப்பு ஊடாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் வாக்கு வங்கியை இனவாதம் ஊடாக கைக்கொள்ளும் உத்தியெனவும் எதிர்வு கூறுவதை காணலாம்
Comments
Post a Comment