Agaramuthali Thamizh Facebook
ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இட்லி அரிசி – 1/4 கப், வரகு அரிசி – 1/4 கப், வெள்ளை சோளம் – 1/4 கப், கருப்பு கொண்டைக்கடலை – 1/4 கப், கொள்ளு – 1/4 கப், கேழ்வரகு – 1/4 கப், தட்டைப் பயறு – 1/4 கப், பச்சைப் பயறு – 1/4 கப், உளுந்து – 1/4 கப், இந்த எல்லா பொருட்களையும் மொத்தமாக போட்டு இரண்டிலிருந்து மூன்று முறை நன்றாக கழுவி நல்ல தண்ணீரை ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் வர மிளகாய் – 4, சின்ன வெங்காயம் – 2 பல், தோல் உரித்த பூண்டு பல் – 2, சோம்பு – 1/2 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், பட்டை மிகச் சிறிய துண்டு – 1 , கறிவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை போட்டு கொரகொரப்பாக அரைத்து அதன் பின்பு 8 மணிநேரம் ஊறி இருக்கும் நவதானிய கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அடைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய வீட்டில் மிக்ஸி ஜாரில் இந்த மாவை அரைக்க முடியவில்லை என்றால் கிரைண்டரில் போட்டும் அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.
மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு, உடனடியாக இதை அடைதோசை வார்த்தாலும் சுவையாகத்தான் இருக்கும்.
தேவைப்பட்டால் இரண்டு மணி நேரம் இந்த மாவை புளிக்க விட்டு அதன் பின்பும் அடை தோசை வார்த்தும் சாப்பிடலாம்.
அடை தோசை வார்க்கும் போது மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வார்த்தால் சுவையாக இருக்கும்.
அப்படி இல்லை என்றால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்க்கலாம். அப்படி இல்லை என்றால் முருங்கைக்கீரையை சேர்க்கலாம். அது அவரவர் விருப்பம் தான்.
தோசைக்கல்லை நன்றாக சூடு செய்து விட்டு அதன் பின்பு கட்டியாக இருக்கும் மாவை தோசைக்கல்லில் வார்த்து சிறிய அளவில் வட்டமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய கையில் கொஞ்சம் தண்ணீரை நனைத்து இந்த அடை மாவை கையாலேயே பரப்பிவிட்டு கொண்டாலும் சரிதான்.
அப்படி இல்லை என்றால் வாழையிலையில் தட்டி அதன் பின்பு தோசைக்கல்லில் போட்டு அடையை மிதமான தீயில், தேவைக்கேற்ப நெய் அல்லது எண்ணெய் ஊற்றி நன்றாக வேக வைத்து எடுத்து சுட சுட பரிமாறிக்கொள்ளலாம்.
இதனுடைய ருசி அத்தனை அருமையாக இருக்கும். அதை விட ஆரோக்கியத்திற்குக் குறைவே கிடையாது.
Comments
Post a Comment