இவ்வுலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தான் பிறந்தது முதல் இறக்கும் வரையான காலத்தில் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு உரித்துடையவனாவான். அத்தகைய வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு சமூகத்தினாலும், அரசினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதனின் நியாயமான கோரிக்கைகளே உரிமைகளாகும்.
உரிமைகள் சட்டரீதியாக எமது உள்நாட்டு சட்டங்களினாலும் சர்வதேச சட்டங்களினாலும் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டினுடைய அரசியலமைப்பினால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனவும், சர்வதேச சட்டங்களினாலும், சமவாயங்களினாலும் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் மனித உரிமைகள் எனவும் அழைக்கப்படும்.
தற்போது இலங்கையில் நடைமுறையில் இருக்கும் 1978ம் ஆண்டு ஜனநாயக சோசலிச குடியரசு யாப்பின் அத்தியாயம் 3, உறுப்புரை 10 தொடக்கம் 14 வரையான உறுப்புரைகளில் இலங்கை அரசிற்குட்பட்ட பிரஜைகள் அனைவருக்கும் உரித்தான உரிமைகள் பற்றி கூறுகின்றது.
உறுப்புரை 10இன் பிரகாரம் ஒவ்வொரு ஆளும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருக்கவும், சிந்தனை செய்வதற்கான சுதந்திரம் மற்றும் மனச்சாட்சியை பின்பற்றுவதற்கான சுதந்திரம் என்பவற்றிற்கு உரித்துடையவரும் ஆவார்.
உறுப்புரை 11 இன் பிரகாரம் எந்தவொரு ஆளும் சித்திரவதைக்கோ அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கோ அல்லது தண்டனைக்கோ உட்படுத்தப்படலாகாது.
உறுப்புரை 12 எமது அரசியலமைப்பின் மிக முக்கியமான ஏற்பாடாகும். அதாவது சட்டத்தின் முன்னிலையில் ஆட்கள் அனைவரும் சமமானவர்கள் ஆவர். இங்கு உயர்ந்தோன், தாழ்ந்தோன், ஏழை, பணக்காரன், ஆண்டான், அடிமை என்ற எந்தவொரு வேற்றுமையும் இன்றி அனைவரையும் சட்டம் தன் முன்னிலையில் சமமானவர்களாகவே பார்க்கின்றது. அதேப்போல அனைவரும் சட்டத்தினால் சமமான பாதுகாப்பிற்கும் உரித்துடையவர்க ளாவர். அத்துடன் சட்டத்தின் பிரகாரம் இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற்கொள்கை அல்லது பிறப்பிடம் ஆகிய எந்த காரணத்திற்காகவும் எந்தவொரு பிரஜையையும் ஓரங்கட்ட முடியாது.
ஒரு நபர் கைது செய்யப்படும்போது சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிமுறைப்படியே கைது செய்யப்பட வேண்டும். சட்டத்திற்கு மாறாக எந்த ஒரு நபரும் எதேச்சையாக கைது செய்யப்படவோ தடுத்துவைக்கப்படவோ முடியாது. கைது செய்யப்படும்போது கைது செய்பவரால் கைது செய்யப்படுபவருக்கு கைதுக்கான காரணம் அறிவிக்கப்படுதல் வேண்டும். தான் என்ன காரணத்திற்காக கைது செய்யப்படுகின்றேன் என்பதை அறிய அனைவருக்கும் உரிமை உண்டு. அதேநேரம் ஒருவர் குற்றவாளியாக எண்பிக்கப்படும் வரை சுத்தவாளியாக ஊகிக்கப்படுதல் வேண்டும் என சட்டம் கூறுகின்றது.
உறுப்புரை 14 இன்படி ஒவ்வொரு பிரஜைக்கும் பேசுவதற்கும் சுதந்திரமாக கருத்து வெளியிடுவதற்குமான உரிமை, விரும்பிய தொழிலை செய்வதற்கான உரிமை, அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை, தனது சொந்த கலாசாரத்தை அனுவிப்பதற்கான உரிமை, நடமாடுவதற்கான உரிமை, இலங்கைக்கு திரும்பி வருவதற்கான சுதந்திரம், தொழிற்சங்கமொன்றை அமைக்கவும் அதில் சேர்வதற்குமான சுதந்திரம் என்பன அடிப்படை உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மேற்கூறிய உரிமைகள் அனைத்தையும் இலங்கையிலுள்ள பிரஜைகள் அனைவரும் எவ்வித பாகுபாடும் இன்றி அனுபவிக்க உரித்தானவர்களாவர். அதேநேரம் இவ்வுரிமைகள் எவரேனும் பகிரங்க அலுவலர்களினாலோ அல்லது நிர்வாக நடவடிக்கைகளினாலோ ஏதேனும் சந்தர்ப்பங்களில் மீறப்படுமாயின் அல்லது மீறப்பட இருக்குமாயின் அதனால் பாதிக்கப்படுகின்ற நபர்கள் இலங்கையின் உயர் நீதிமன்றத்திற்கு அடிப்படை உரிமை மீறல் மனு செய்து வழக்கு தாக்கல் செய்வதன் மூலம் அதற்கான உரிய நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம். (உறுப்புரை 17, 126) இது தவிர மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தல், குறைகேள் அதிகாரியின் நியமனம் ஆகிய பொறிமுறைகளும் அடிப்படை உரிமை மீறல்களுக்கான இலங்கையில் உள்ள ஏனைய வினைத்திறன் மிக்க பொறிமுறைகளாகும்.
T. Thanushapriya ( LL.B)
University Of Colombo
Comments
Post a Comment