இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் ..!
"தில்லானா மோகனாம்பாள்"
இந்த கதையை அன்றைய ஆனந்த விகடன் வார இதழில் தொடர்கதையாக எழுதி வந்தவர் கொத்தமங்கலம் சுப்பு. இந்தக் கதை விகடனில் வெளிவந்து கொண்டிருந்தபோதே ஆர்வத்தோடு அதைப்படித்து வந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் சினிமாவாக இதை எடுக்க ஆசைப்பட்டார்.
கதையின் உரிமை யாரிடம் இருக்கிறது என்று விசாரித்தார். அது ஆனந்த விகடன் ஆசிரியரான எஸ்.எஸ்.வாசனிடம் இருந்தது. உடனடியாக எஸ். எஸ். வாசனை சந்தித்த ஏ.பி.நாகராஜன், ஐயா இந்தக் கதையை நான் திரைப் படமாக எடுக்க விரும்புகிறேன்.
இந்தக் கதையின் உரிமைக்காக நான் கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்று சொல்ல முடியுமா..? என்று கேட்டாராம். ஒரு கணம் சிந்தித்த வாசன் 25 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் , போதும் என்றாராம் . சற்றும் தயக்கமின்றி உடனே "செக்" எழுதி கொடுத்துவிட்டாராம் ஏ.பி.என். ஏனென்றால் கதை உரிமைக்காக வாசன் 50 ஆயிரம் ரூபாயாவது கேட்பார் என்று எதிர்பார்த்து வந்திருந்தார் ஏ.பி.நாகராஜன் . ஆனால் வெறும் 25 ஆயிரத்தை மட்டுமே வாசன் சொன்னதும் ஏ.பி.என்.னுக்கு ஒரே ஆச்சரியம்..! . வாசன் கேட்ட 25 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து விட்டு , ஒரு கணம் யோசித்தார் ஏ.பி.என். மீதி 25 ஆயிரத்தை என்ன செய்வது..? . "சட்" என ஒரு யோசனை தோன்றியது. இந்தப் பணத்தை அப்படியே "தில்லானா மோகனாம்பாள்" கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவிடம் கொண்டு போய்க்கொடுத்து விட்டால் என்ன..? உடனடியாக எழும்பூர் கண் மருத்துவமனைக்கு புறப்பட்டார் ஏ.பி.நாகராஜன். அந்த சமயத்தில் கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு , கண் சிகிச்சைக்காக எழும்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆஸ்பத்திரிக்குச் சென்று, கொத்தமங்கலம் சுப்புவை சந்தித்த ஏ.பி.நாகராஜன் .... "தில்லானா மோகனாம்பாள்" கதை உரிமையை வாசனிடமிருந்து பெற்ற செய்தியை சொல்லிவிட்டு, "கதை எழுதிய உங்களுக்கு என் சொந்த முறையில் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க விரும்புகிறேன்.." என்றாராம் ஏ.பி.என். அதற்கு கொத்தமங்கலம் சுப்பு சிரித்துக்கொண்டே சொன்னாராம் : "ஐயா... இப்போதுதான் கொஞ்ச நேரத்துக்கு முன் வாசன் ஐயா இங்கு வந்து விட்டுப்போனார். என் கதை உரிமைக்காக நீங்கள் அவரிடம் கொடுத்த 25 ஆயிரம் ரூபாயை முழுவதுமாக என்னிடம் கொடுத்துவிட்டு இப்போதுதான் இங்கிருந்து புறப்பட்டுப்போனார்" என்றார்.
நம்ப முடியாமல் திகைத்துப்போனார் நாகராஜன்..! எவ்வளவு பெரிய உள்ளம் எஸ்.எஸ்.வாசனுக்கு..? ஆனந்தக் கண்ணீரோடு தான் கொண்டு போயிருந்த ரூ.25 ஆயிரத்தையும் கொத்தமங்கலம் சுப்புவிடமே கொடுத்து விட்டு , அளவற்ற மன நிறைவோடு அங்கிருந்து திரும்பினாராம் ஏ.பி.நாகராஜன் ..! ஆம்.. ! இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் ..! ம்... அதெல்லாம் அந்தக்காலம்!!
Comments
Post a Comment