இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு (சிசேரியன்) வயிறு மிகவும் தொங்குகிறது. Tummy belt அணிவது பயனளிக்குமா? வயிற்றுக்கான பயிற்சிகளை ( abdomen exercise ) எப்போதிருந்து செய்ய ஆரம்பிக்கலாம்?
இன்றைய மருத்துவ குறிப்பு
#குறிப்புகள் (மருத்துவம்| பெண்மை) |
மருத்துவர் ஸ்ரீதேவி பதில் சொல்கிறார்.
- கர்ப்பத்துக்கு முந்தைய உடல்வாகுக்கு உடனே திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் பல பெண்களுக்கும் இருக்கிறது. பிரசவத்துக்குப் பிறகு, குறிப்பாக சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு பெரிதாகவும் தொய்வடைந்தும்போன வயிற்றுப்பகுதியை எப்படிக் குறைப்பது என்ற கேள்வியும் பலருக்கு உண்டு.
- கர்ப்பத்தின்போது உங்கள் உடலுக்குள் நிறைய மாற்றங்கள் நிகழும். குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப கர்ப்பப்பை பெரிதாகும். வயிற்றுப் பகுதியிலுள்ள தசைகளும் ரொம்பவே விரிவடையும்.
- எனவே, பிரசவமானதும் பல பெண்களுக்கும் இந்த வயிற்றுத் தசைகளுக்கு இடையில் நிறைய இடைவெளியும், தளர்ந்த சருமமும் இருக்கும். இது பெரும்பாலான பெண்களுக்குப் பெரிய ஸ்ட்ரெஸ்ஸை கொடுக்கும் விஷயம்.
- சிலருக்கு முதுகுவலியையும் ஏற்படுத்தலாம். எல்லாப் பெண்களுக்கும் இப்படி ஏற்படுவதில்லை. தசை அமைப்பு சரியாக உள்ளவர்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகும் வயிற்றுத்தசைகள் தளராமல் இருக்கும்.
- பெல்ட் உபயோகிக்கலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். வேறுசில சாய்ஸும் உங்களுக்கு உண்டு. அவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்.
- அப்டாமினல் பைண்டர் அல்லது ராப் உபயோகிக்கலாம். இது வயிற்றுத்தசைகளை உறுத்தாமல், அழுத்தாமல் காட்டனால் தயாரிக்கப்பட்டிருக்கும். பிரசவமான உடனேயே உபயோகிக்கக்கூடியது இது. வயிறு மற்றும் முதுகுப்பகுதி தசைகளுக்கு இது சப்போர்ட் கொடுக்கும். வலியையும் குறைக்கும். கூன் விழாமலிருக்கவும் உதவும்.
- சில பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு `Diastasis recti' என்ற பிரச்னை இருக்கும். கர்ப்பப்பை விரிவதால் ஏற்படும் பிரச்னை இது. விலகியிருக்கும் இரண்டு தசைகளும் மீண்டும் அருகருகே வர எட்டு வாரங்கள் ஆகும்.
- அந்த நிலையிலும் இந்த பைண்டரை உபயோகிக்கலாம். இந்த பைண்டரை உபயோகிக்கும் முன் அது சுவாசிக்கும்படியான மெட்டீரியலில் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
- சிசேரியன் தையலின்மேல் அது அழுத்தாமலும் பார்த்துக்கொள்ளவும். மருத்துவமனையில் இருக்கும்போதே மருத்துவரிடம் கேட்டு அவர் பரிந்துரைக்கும் பைண்டரை உபயோகிக்கவும்.
- கீழ் இடுப்புப்பகுதியை அழுத்தவும் கூடாது. அரிப்பு, எரிச்சல் போன்றவை வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து அணிந்துகொண்டிருக்காமல் இடையிடையே அதை அகற்றிவிடலாம்.
- இந்த பைண்டரை உபயோகிப்பதால் வயிறு குறையுமா என்றால் குறையாது. இது எடைக்குறைப்புக்கான விஷயமல்ல. வயிறு மற்றும் முதுகுத் தசைகளை வலியின்றி வைத்து சப்போர்ட் கொடுக்க மட்டுமே உதவும்.
- இது வயிறு மற்றும் இடுப்புப்பகுதியை ஷேப்பாகக் காட்ட உள்ளாடையுடன் சேர்ந்து அணிவது. இது மிகவும் டைட்டாக இருக்கும் என்பதால் சிசேரியன் ஆனதும் இதை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை.
- நீங்கள் கேட்டுள்ள `போஸ்ட் பார்ட்டம் அட்ஜஸ்ட்டபுள் அப்டாமினல் பெல்ட்' உபயோகிக்கவும் சில நாள்கள் காத்திருக்க வேண்டும். சிசேரியன் செய்த காயம் முற்றிலும் ஆறியிருக்க வேண்டும். பிரசவமாகி 6 - 8 வாரங்கள் கழித்துதான் இதை உபயோகிக்க வேண்டும்.
- சிசேரியனுக்குப் பிறகு கதீட்டரை அகற்றியதும் இடுப்பெலும்புப் பகுதிக்கான சின்னச் சின்ன பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செய்யத் தொடங்கலாம்.
- கர்ப்பகாலத்தில் இடுப்பெலும்புப் பகுதிகள் பலவீனமடைந்திருக்கும். அதன் காரணமாகச் சிலருக்கு சிறுநீரை அடக்க முடியாத நிலைகூட ஏற்படலாம்.
- கீகெல் பயிற்சிகள் மற்றும் ரத்தக்கட்டைத் தவிர்க்கச் செய்ய, கால்களுக்கான பயிற்சிகளையும் செய்யலாம். சிசேரியன் காயம் ஓரளவு ஆறியதும் பிரசவத்துக்கு 7 - 8 நாள்கள் கழித்து வயிற்றுப் பகுதிக்கான மிதமான பயிற்சிகளையும் செய்யத் தொடங்கலாம்.
- வயிறு மற்றும் இடுப்புப்பகுதி தசைகளை உள்ளிழுத்து சில நொடிகள் வைத்திருக்கும் பயிற்சியை உங்கள் மருத்துவரே உங்களுக்குக் கற்றுத் தருவார்.
- எந்தப் பிரச்னையும் இல்லாத சிசேரியன் என்றால் 6 - 8 வாரங்களில் உங்கள் வழக்கமான உடற்பயிற்சிகளைத் தொடரலாம். வாக்கிங், மிதமான யோகா, அதிக எடை தூக்காத பயிற்சிகளுடன் தொடங்கலாம்.
- கடினமான பயிற்சிகளை 12 வாரங்கள் கழித்து மருத்துவரின் ஆலோசனையுடன் தொடங்கலாம். 3 - 6 மாதங்களுக்குப் பிறகு, மற்ற பயிற்சிகளைத் தொடரலாம்.
- எந்தப் பயிற்சியுமே செய்து பழகாதவர் என்றால் மருத்துவரிடம் கேட்டு, உங்கள் உடல்நிலையைப் பரிசோதித்த பிறகே செய்யத் தொடங்க வேண்டும். மொத்தத்தில் எந்தப் பயிற்சியையும் மருத்துவரின் ஆலோசனையில்லாமல் தொடங்க வேண்டாம்.
Comments
Post a Comment